தம்மை தாக்கியோரில், சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்தவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சார்ஜன்ட் மேஜர் பிரேமாநந்த உடலாகமவும் இருந்தாரா என்பதை அடையாளம் காட்ட தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வரும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மற்றும் அவர் மனைவி  ஜயகொடி ஆரச்சிகே தம்மிகா மல்காந்தி தென்னகோன் ஆகிய இருவரும் இலங்கை வரவுள்ளனர்.  

இந்த விவகாரம் குறித்த வழக்கின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி கம்பஹா நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையிலேயே அவ்விருவரும் அன்றைய தினம் மன்றில் ஆஜராகி அடையாள அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

தம்மை தாக்கியவர்களை மீள காணுமிடத்து, அவர்களை அடையாளம் காட்ட முடியும் என உபாலி தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்துள்ளதாகவும், அத்துடன் நீதி மன்றம் குறிப்பிடும் திகதியில் மன்றில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவர்கள் அறிவித்துள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்களான  சுமணபால, ஜயவீர ஆகியோர் கம்பஹா நீதிவான் காவிந்தியா நாணயக் காரவிடம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி அடையாள அணிவகுப்பை நடத்துவதாக நீதிவான் அறிவித்தார். அதன் பிரகாரமே அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லசந்தவை கொலை செய்த சந்தேக நபர்களே உபாலி தென்னகோன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அதற்கு ஆதரமாக  சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் 5 தொலைபேசிகள் மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட அழைப்புக்கள் ஆகியவற்றை   முன்வைக்கின்றனர். அத்துடன் உபாலியை தாக்க முன்பாக சந்தேக நபர்கள் அவரை தொடர்ச்சியாக பின்தொடர்ந்துள்ளமையும் தொலைபேசி தரவுகளை மையப்படுத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி உபாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்ப்ட்டிருந்ததுடன் இது குறித்து ஆரம்ப கட்ட விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் முன்னெடுத்தனர்.  இந் நிலையிலேயே அது குறித்த விசாரணைகள் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்டன.