பொறிக்குள் தள்ளும் பழிவாங்கல்

Published By: J.G.Stephan

08 Feb, 2021 | 05:21 PM
image

-சத்ரியன் -

“ஆணைக்குழுக்களே குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து, தண்டனைகளையும் விலக்குரிமைகளையும் பரிந்துரைக்க முடியுமென்றால், மிகப் பெரிய நீதிமன்றக் கட்டமைப்புகள் ஏதும், நாட்டுக்கு அவசியமில்லை என்ற நிலைமையல்லவா ஏற்படுகின்றது”

அரசியல் பழிவாங்கல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, விசேட அதிகாரங்களுடன் கூடிய ஆணைக்குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் எடுத்ததற்கெல்லாம் ஆணைக்குழுக்களை நியமிக்கும் வழக்கத்தைக் கொண்டதாக இருக்கும் நிலையில், இதனையும் பத்தோடு பதினொன்றாகத் தான் பலரும் எண்ணியிருக்கிறார்கள். ஆனால், இந்த ஆணைக்குழு அவ்வாறானதல்ல. இது நீதித்துறை அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்டிருக்கின்ற ஒரு விசேட ஆணைக்குழு.

இலங்கையின் வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வாறான இரண்டு ஆணைக்குழுக்கள் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் முதைல் முறையும், 1978இல், ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத்தினால் இரண்டாவது முறையும் இவ்வாறான விசேட ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இந்த இரண்டு ஆணைக்குழுக்களுமே, அரசியல் பழிவாங்கல் நோக்குடன் தான் அமைக்கப்பட்டவை. 1978இல் ஜே.ஆர் நியமித்த விசேட ஆணைக்குழுவினால் தான், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப்  பறிக்கின்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதே இலக்குடன் தான் இப்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மற்றொரு ஆணைக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஓய்வுபெற்ற நீதியரசர் பிரியந்த சமரக்கோன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவில் நீதியரசர்கள், குமுதினி விக்ரமசிங்க, ரத்னப்பிரிய குருசிங்க ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு அரசியல் எதிராளிகளைப் பழிவாங்கும் நோக்குடன் தான் அமைக்கப்பட்டுள்ளதாக, ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். தற்போதைய அரசாங்கம், பதவிக்கு வந்ததில் இருந்து அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடவில்லை என்றும், ஒருபோதும் அவ்வாறு செயற்படப் போவதில்லை என்றும் கூறி வந்திருக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் இவ்வாறான கருத்தைக் கூறியிருக்கிறார்கள். முன்னைய நல்லாட்சி அரசாங்கம் போன்று அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடமாட்டோம் என்று கூறியிருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் நகர்வுகள் அவ்வாறான வாக்குறுதிகளுக்கு அமைவானதாக இல்லை என்பதே உண்மை.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்கவில்லை என்று ஒரேயடியாக மறுக்க முடியாது. அவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றன.  பல குற்றச்சாட்டுகள் தொடர்பான அவசரப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சில குற்றச்சாட்டுகள், போதிய ஆதாரங்களின்றியும் முன்வைக்கப்பட்டன.

அதேவேளை, பல முக்கியமான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க விடப்பட்டனர். அவ்வாறு தப்பிக்க விடப்பட்ட பலர் இப்போது உயர் பதவிகளில் அமர்ந்துள்ளதுடன், நல்லாட்சி அரசில் இருந்தவர்களுக்கே பெரும் ஆபத்தாகவும் மாறியிருக்கின்றனர்.

இப்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததும், அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரித்து, அவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க ஒரு ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்திருந்தார். அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் மற்றும் அதற்கு பின்புலமாக இருந்தவர்கள் 22 பேர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க, மலிக் சமரவிக்ரம,  ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்க, சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட 22 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்து, இவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள தண்டனைகளை உறுதி செய்வதற்கும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், புதிய ஆணைக்குழுவுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்குள் இந்த ஆணைக்குழு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டிருக்கிறது.

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இரண்டு விதமான விடயங்களை முன்வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும், நிவாரணம் கொடுப்பதற்குமான பரிந்துரை முதலாவது.

அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான பரிந்துரைகள் இரண்டாவது. இந்த விசாரணைக்குழு, தமது ஆணைக்கு அப்பால் செயற்பட்டுள்ளதாகவும், நீதித்துறையின் சுயாதீனம், அதிகாரங்களின் தலையீடு செய்வதாகவும் உள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ள 61 வழக்குகள் உள்ளிட்ட, 79 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு இந்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு கூறுகிறது.

உதய கம்மன்பில, பசில் ராஜபக்ஷ, பிள்ளையான், துமிந்த சில்வா உள்ளிட்ட பலரை விடுவிக்குமாறு, இந்த ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேல் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்குமாறு, ஆணைக்குழு ஒன்று பரிந்துரை செய்வதற்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

புலன் விசாரணை, குற்றப்பத்திரம் தாக்கல், நீதிமன்ற விசாரணைகளில் உள்ள அல்லது தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளில், திடீரென நியமிக்கப்பட்ட ஒரு ஆணைக்குழு தலையிட்டு, பிரதிவாதிகளை நிரபராதிகள் என விடுவிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது, நீதித்துறையை பரிகாசம் செய்வதாக உள்ளது.

இவ்வாறான ஆணைக்குழுக்களே குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து, தண்டனைகளையும் விலக்குரிமைகளையும் பரிந்துரைக்க முடியுமென்றால், மிகப் பெரிய நீதிமன்றக் கட்டமைப்புகள் ஏதும், நாட்டுக்கு அவசியமில்லாமல் போய் விடும். அவ்வாறானதொரு நிலையை நோக்கியே இலங்கை சென்று கொண்டிருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் தான், புதிய ஆணைக்குழுவின் நியமனம் அமைந்திருக்கிறது.

புதிய ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகளை விலக்கிக் கொள்வதற்கு அல்லது, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனைகளை பரிந்துரைப்பதற்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. பொதுவாக நீதித்துறை அதிகாரங்களுடன் நியமிக்கப்படும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால், குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் குடியியல் உரிமையைப் பறிப்பதற்கு ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்க முடியும்.

இவ்வாறானதொரு பரிந்துரையின் அடிப்படையில் தான், ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆரினால், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இப்போதும் கூட, அரசியல் எதிராளிகள் பலரின் குடியுரிமையைப் பறிக்கும் இலக்குடன் தான், புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆணைக்குக்கள் அரசியல் பழிவாங்கல் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன என்று வெளிப்படையாகத் தெரிகின்ற நிலையிலும், தமது அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று தம்பட்டம் அடிப்பது அர்த்தமற்றது.

அதேவேளை, தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதை நிறுத்த தவறினால், அதன் விளைவுகள் இன்னும் பாரதூரமானதாகவே இருக்கப் போகிறது.

ஏனென்றால், ஏற்கனவே, ஜனநாயக அரசியல் வெளி குறுகி விட்டதாகவும், ஜனநாயக உரிமைகள் ஆபத்தில் உள்ளதாகவும் சர்வதேசம் உறுதியாக நம்பத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறான நிலையில், அரசியல் எதிராளிகளைக் குறிவைக்கும் போது அது இன்னும் அரசாங்கத்தை சிக்கலான நிலைக்குள் தள்ளி விடும்.

குறுக்கு வழியில் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், வழக்குத்தொடுப்பதற்கும் காரணமானவர்களை தண்டிப்பதும் தான், இப்போதைய இலக்காக இருக்கும் நிலையில், பல விடயங்கள் அரசாங்கத்தின் கண்ணை மறைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04