இலங்கை விமானப்படைக்கு 2006 ஆம் ஆண்டு மிக் ரக விமானங்கள் கொள்வனவு  செய்யப்பட்டமை தொடர்பிலான மூல ஆவணம் விமானப்படையிடமிருந்து காணாமல் போயுள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணை ஒன்றினை நடத்துமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது  கொழும்பு  கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புலனய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வரும் நிலையிலேயே, நேற்று  அவ்விசாரணைகளுக்கு மேலதிகமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்ப்ட்டுள்ளது.

மிக் விமான கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மிக் விமான கொள்வனவு குறித்த ஆவணங்களை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கையளிக்க ஏற்கனவே கோட்டை நீதிவான் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று அது தொடர்பில் அறிக்கை ஒன்றினை விமானப்படையின் சட்டப் பிரிவு பணிப்பாளர் கோட்டை நீதிவானுக்கு சமர்ப்பித்திருந்தார். அதில் மிக்  விமானக் கொள்வனவு குறித்த மூல ஆவணம் விமானப்படையிடம் இருந்து காணாமல் போயுள்ளதாக அவர் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.

இந் நிலையிலேயெ மிக் விமானக் கொள்வனவு தொடர்பிலான மூல ஆவண  தகவல்களை மறைக்க அல்லது வேறு நோக்கங்களுக்காக திட்டமிட்டு காணாமல் போக  செய்யப்பட்டுள்ளதா என சிறப்பு விசாரணைகளை நடத்துமாறும், அவ்வாறு விசாரணையில் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டால் அவர்களைக் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறும் கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இந் நிலையில் மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்த பிரதிகள் கல்கிசை மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றின் நிமித்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் நேற்று கோட்டை நீதிவானின் கவனத்துக்கு கொன்டுவரப்பட்டது. இந் நிலையில் அப்பிரதிகள் உண்மையாணவை தானா என்பது குறித்தும் விசாரணை நடத்துமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் மிக் விமானக் கொள்வனவு குறித்து இடம்பெறும் விசாரணையை நிறுத்தாமல், மூல ஆவணங்கள்  இல்லாத போதும் அதன் பிரதிகளை மையப்படுத்தி முன்னெடுக்குமாறும் பொலிஸாருக்கு நீதிவான் ஆலோசனை வழங்கினார்.

இந் நிலையில் குறித்த விவகாரத்தின் சந்தேக நபராக கருதப்படும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை விசாரணைக்கு அழைக்கும் அறிவித்தலை  அவர் வசிப்பதாக நம்பப்படும் உக்ரேன் முகவரியில் கையளிக்க முற்பட்ட போதும், அவர் அங்கில்லை என அறியக் கிடைத்துள்ளதாக வெளி விவகார அமைச்சு நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தது. இந் நிலையில் இது குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.